தமிழகத்தில் சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்: டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை, மாநில நிர்வாகி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்

ஒரே தேசம், ஒரே தேர்வு என்று சொல்லிக்கொண்டு இந்தியா முழுவதும் ஒரே தேர்வாக நீட் தேர்வை கொண்டு வந்தது மத்திய அரசு. அதேசமயம், மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு, சண்டிகர் போன்ற இடங்களில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் தனி தேர்வு என்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் ஏன் பாகுபாடு காட்டுகிறீர்கள். மேலும் அந்த தேர்வை நடத்துவதோ மத்திய அரசு என்று கூறிவிட்டு இப்போது தனியாக கொண்டு செல்வது ஏன்? தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் மறுபடியும் தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதால் மீண்டும் சட்டப்போராட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு, இதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவர்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு ‘சர்வீஸ் கோட்டா’ வழங்குவது தான். அதையே ஆட்டம் காணும் அளவிற்கு நீட் தேர்வு உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பது மட்டுமல்ல சுகாதார கட்டமைப்பில் மிக முக்கியமானது ‘சர்வீஸ் கோட்டா’ தான். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருபவர்கள் மேற்படிப்பு படிப்பார்கள் அதன்பிறகு சொந்த மாநிலத்துக்கு சென்று விடுவார்கள். இதில் குறிப்பாக ‘சர்வீஸ் கோட்டா’ இல்லாததால் அதாவது நீட்தேர்வு வந்ததால் கிட்டத்தட்ட 90 சதவீதம்  வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் படித்து சென்றுள்ளனர்.

அதாவது உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் மற்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ள அரசு மருத்துவர்கள் தான் படிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இதே நிலைமை தான் நீடிக்கிறது. இதே நிலைமை நீடித்தால் வரும் காலங்களில் இதய மருத்துவ நிபுணர்கள், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. எனவே தமிழக அரசு இதன் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். இதனால் சுகாதார கட்டமைப்புக்கும், மக்களுக்கும் சிறப்பு மருத்துவர்களை அனைத்து அரசு மருத்துவமனைகளில் உறுதிப்படுத்தும் விதமாக இருக்கும்.

இல்லையென்றால் உயர்சிறப்பு மருத்துவர்கள் தட்டுப்பாடு உருவாகக்கூடிய நிலை வந்துவிடும். கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து இதய நிபுணர்களுக்கான மருத்துவம் படித்து விட்டு அவர்களுடைய மாநிலத்திற்கு சென்று விட்டால் தமிழகத்தில் இதய நிபுணர்கள் இல்லாத நிலை உருவாகும். இது சுகாதார கட்டமைப்புக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் தனியார் மருத்துவர்கள் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த சட்டப் போராட்டத்தையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளோம்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் சென்று, அரசு அரசாணை வெளியிட்ட பிறகும் அதில் உள்ள காலியிடங்களை கடந்த 4 வருடங்கள் நிரப்பப்படாமல் தான் உள்ளது. கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து இதய நோய் சிறப்பு மருத்துவம் படித்தவர்கள் தங்கள் படிப்பு முடிந்தவுடன் அவர்களுடைய மாநிலத்துக்கு சென்று விட்டால் தமிழகத்தில் இதய நிபுணர்கள் இல்லாத நிலை உருவாகும். இது சுகாதார கட்டமைப்புக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

Related Stories: