2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட வருகையா?: 2 நாள் பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் மத்தியமைச்சர் அமித்ஷா.!!!

சென்னை: சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானத்தில் டெல்லி புறப்பட்டார். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக  நேற்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், நேற்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு அமித்ஷா சென்றார். பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.  சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். பின்னர், ரூ70 ஆயிரம் கோடி அளவிலான பல்வேறு  திட்டங்களுக்கு அமித்ஷா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தமிழகம் வந்த அமித்ஷாவை வரவேற்பதற்கு பாஜக, அதிமுக தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் விமான நிலையம், லீலா பேலஸ் ஓட்டல், கலைவாணர் அரங்கம் என  அமித்ஷா செல்லும் வழிகளில் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, லீலா பேலஸ் ஓட்டல் தங்கிய அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சந்தித்து பேசினர். அப்போது, நடைபெறவுள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து  விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 50 தொகுதிகளை அமித்ஷா கேட்டதாகவும், கொங்கு மண்டலத்தில் 10 இடங்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுக்கு  செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்க முதல்வர் பழனிசாமி தயங்குவதாகவும், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமே பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது 2 நாள் பயணத்தை முடித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இருப்பினும், அமித்ஷாவின் தமிழக வருகை வரவுள்ள  சட்டமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழியாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நேற்று அமித்ஷாவை வரவேற்க திரண்ட அதிமுக தொண்டர்கள் இன்று வழியனுப்ப வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: