நாகையில் 2வது நாளாக படகில் சென்று பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் கைது: போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதம்

நாகை: நாகையில் நேற்று 2வது நாளாக படகில் சென்று பிரசாரம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அவரது இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பிரசாரம் செய்த சிறிது நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். 1 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார்.

நேற்று காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தார். பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி ஸ்டாலின், அங்கு கூடியிருந்த மீனவ பிரதிநிதிகள், மீனவ பெண்கள், மீனவர்கள் என்று அனைவரையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் சென்று விசைப்படகில் ஏறி முகத்துவாரம் வரை சென்றார். அப்போது மீனவர்கள் பிரச்னைகளை கேட்டறிந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விசைப்படகில் பயணம் செய்துவிட்டு திரும்பும்போது அவரே விசைப்படகை ஓட்டியபடி வந்தார்.

துறைமுகம் வந்ததும் போலீசார் அவரை கைது செய்வதாக கூறி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். துறைமுகத்தை விட்டு வெளியே வரும்போது அங்கு நின்ற மீனவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள், மீனவர் தினத்தில் எங்களை பார்த்து விட்டு செல்லும் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களை கைது செய்ய விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் மற்றொரு பிரிவினர் அக்கரைப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 20 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீஸ் வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் ஏற்றப்பட்டார்.

அவருடன் கேஎன்நேரு உள்ளிட்ட நிர்வாகிகளையும் ஏற்றி நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மதியம் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுக தேர்தல் பிரசாரத்தை முடக்கும் அதிமுக அரசு அமித் ஷாவை வரவேற்க,  தங் கள் கட்சிக்காரர்களை அனுப்பி கூட்டத்தை கூட்டியிருக்கிறது, அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் யாரையும் கைது செய்யவில்லை? அதிமுகவை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார் அமித்ஷா. திமுகவின் தேர்தல் பிரசாரத்தை முடக்கினால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Related Stories: