ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ250 கோடி மானியம் விடுவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ250 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் ரேஷன் கடைகள், 270 எண்ணெய் விநியோக மையங்களை  கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. இதில், 27 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தனியார் எஜென்சிகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு மண்ணெணெய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்த வகையில் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய கடந்த 2018 முதல் 2020 வரை மானியம் வழங்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, பொது விநியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-19ல் ரூ398 கோடியும்,2019-20ல் ரூ200 கோடி என மொத்தம் ரூ598 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால், நியாயவிலை கடைகளை நடத்தும் கூட்டுறவு  சங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தாக தினகரன் நாளிதழில் கடந்த நவ.1ம் தேதி செய்தி வெளியானது. இதை தொடர்ந்து  கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-19 ஆண்டுக்கான மானியம் ரூ250 கோடியை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

அதில், கடந்த 2018-19 ஆண்டுக்கு ரூ398.02 கோடி மானியம் தர வேண்டியுள்ளது. இதில், தற்போது, ரூ250 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ148.02 கோடி 2021-2022ம் ஆண்டில் தர பரிசீலிக்கப்படும். தற்போது விடுவிக்கப்பட்ட தொகையை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: