13 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 32.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* தமிழக அரசு உத்தரவு

* அடுத்த ஆண்டு முதல் பணிகளை தொடங்க திட்டம்

* கொரட்டூர் தடுப்பணைக்கு 35 கோடி மதிப்பீட்டில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

* தடுப்பணை 166.42 மீட்டர்  நீளத்தில் 4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது.

* வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் 32 மணல் போக்குகளும் அமைக்கப்படுகிறது.

* 13,223 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த தடுப்பணை உருவாக்கப்படுகிறது.   

சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே கொரட்டூரில் புதிய தடுப்பணை கட்ட 32.45 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை  தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இப்பணிகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கேசாவரத்தில் தொடங்கும் கூவம் ஆறு  பேரம்பாக்கம்,அதிகத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கி.மீ தூரம்  பயணித்து இறுதியாக நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இதில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தில்,  கூவம் ஆற்றின் குறுக்கே கொரட்டூர் அணைக்கட்டு கடந்த 1879ம் ஆண்டுகட்டப்பட்டது.  இதன்மூலம் மழைக்காலங்களில் கிடைக்கும் நீர், அங்கு  சேமிக்கப்பட்டு, பாசன பயன்பாட்டிற்கு உதவியது.

மேலும்,  நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும், இந்த தடுப்பணை உதவியது. இதை பயன்படுத்தி, அங்கு, 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடந்து  வந்தது. இந்த நிலையில், கடந்த, 2015ம் ஆண்டு பெய்த பெருமழையால், தடுப்பணை முற்றிலும் சேதம் அடைந்தது. கூவம் ஆற்றின் கரைகளும்  பாதிக்கப்பட்டன. இதனிடையே, மூன்று ஆண்டுகளில், 1,000 தடுப்பணைகள் கட்டப்படும்’ என, முதல்வர் எடப்பாடி கடந்த 2017 சட்டசபை  கூட்டத்தொடரில் ஜூனில் அறிவித்தார். முதற்கட்டமாக, 2017-18ம் ஆண்டில், 80 தடுப்பணைகள் கட்ட, 350 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், நபார்டு  கடனுதவியின் மூலம் கொரட்டூர் தடுப்பணைக்கு  35 கோடி மதிப்பீட்டில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி 166.42 மீட்டர் நீளத்தில் 4  மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது.

வெள்ள நீரை வெளியேற்றும் வகையில்  32 மணல் போக்குகளும் அமைக்கப்படுகிறது.  இத்திட்டத்துக்கு, 32.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசு  செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம்13,223 ஏக்கர் பயன்பெறும்என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதில், 27.62  கோடியில்  அணை கட்டுமான பணிக்கும், விளம்பர செலவு 8 லட்சம், தொழிலாளர் நல வாரியத்துக்கு 27.62 லட்சம், ஜிஎஸ்டி வரி 3.31 லட்சம் உட்பட  32.45 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்காக, தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு  செய்து அடுத்த ஆண்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: