அமித்ஷா மீது பதாகை வீசிய முதியவர்: பாஜவினர் கடும் அதிர்ச்சி

சென்னை: சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது முதியவர் ஒருவர் திடீரென பதாகை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக  டெல்லியில் இருந்து எல்லை பாதுகாப்பு படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் மதியம் 1.50 மணியளவில் தமிழகம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாஜ தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் சக்ரவர்த்தி, எம்.என்.ராஜா, மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மாநில  செயலாளர் டால்பின் தர் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தை விட்டு காரில் அமித்ஷா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டார். விமானம் நிலையத்துக்கு வெளியே அமித்ஷாவை வரவேற்க சாலையோரம் பாஜ தொண்டர்கள் ஏராளமானோர் காத்திருந்தனர். அவர்கள் அமித்ஷாவை வரவேற்று உற்சாகமாக ேகாஷமிட்டு கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் அமித்ஷாவின் கார் திடீரென நிறுத்தப்பட்டது. இதை பார்த்ததும் உடனடியாக பின்னால் காரில் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இறங்கி ஓடி வந்து அமித்ஷாவிடம் காரை விட்டு இறங்க வேண்டாம் என்று ேகட்டு கொண்டனர். ஆனால், அமித்ஷா பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி காரில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் ஜி.எஸ்.டி. சாலையில் நடந்தபடி தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தபடி சிறிது தூரம் சென்றார். அப்போது அங்கிருந்த 67 வயது தக்க முதியவர் ஒருவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த பதாகையை அமித்ஷாவை நோக்கி தூக்கி வீசினார்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பாஜ தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து பதாகை வீசியவரை பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பதாகையில் ‘கோ பேக் அமித்ஷா’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் நங்கநல்லூரை சேர்ந்த துரைராஜ்(67) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.  இவர் அண்மையில் நங்கநல்லூரில் பாஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, “ பிரதமர் மோடி அறிவித்த ₹15 லட்சம் பணம் எங்கே?” என்று ேகாஷமிட்டவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அமித்ஷா காரில் புறப்பட்டு கத்திப்பாரா, கிண்டி, மத்திய கைலாஷ், அடையாறு வழியாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவர் மதியம் உணவை முடித்து கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

பின்னர் அவர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இரவில் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கினார். அமித்ஷா வருகையையொட்டி சென்னை விமானம் நிலையம் முதல் அவர் தங்கிய ஓட்டல், நிகழ்ச்சி நடைபெற்ற இடம் வரை சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் அதாவது துணை பிரதமருக்கு இணையான அளவில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பதாகை வீச்சை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவில் அமித்ஷா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். இன்று காலை 10 மணியளவில் அவர் ஓட்டலில் இருந்து கார் மூலம் சென்னை விமானம் நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

உள்துறை அமைச்சர் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, அடையாறு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ஆம்புலன்சும் சிக்கி, நகர முடியாமல் திணறியது. அமித்ஷா சென்ற பிறகே ஆம்புலன்ஸ் சென்றது.

Related Stories: