கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் 140 படங்களின் ரிலீஸ் நிறுத்தம்: 1,200 கோடி வருவாய் இழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் 140 படங்கள் ரிலீசாகாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 500 கோடி முதலீடும் 1200 கோடி வருவாயும் முடங்கிப்போயுள்ளது.தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் 200 படங்கள் வரை திரைக்கு வரும். இந்த ஆண்டில் மார்ச் மாதம் 13ம் தேதி வரை 35 படங்கள் திரைக்கு வந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 16ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. கடந்த நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறந்ததும் தீபாவளிக்கு பிஸ்கோத், மாரிஜுவானா, இரண்டாம் குத்து, தட்றோம் தூக்றோம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

 இதற்கிடையே ஓடிடியில் 8 படங்கள் ரிலீசாகின. இந்த மாதமும் அடுத்த மாதமும் மேலும் 13 படங்கள் வரை வெளியாகும் என கூறப்படுகிறது. மீதியுள்ள 140 படங்கள், இந்த ஆண்டு திரைக்கு வர வேண்டியவை. இதில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், விஷால் நடிப்பில் சக்ரா, ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, கார்த்தி நடிப்பில் சுல்தான், சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், விஜய் சேதுபதியின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் அடங்கும். இதில் சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே 90 படங்கள் வரை உள்ளது. இந்த ஆண்டில் கடந்த 8 மாதமாத தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்ததால் முடங்கியுள்ள 140 படங்கள் மூலம் 500 கோடிக்கு முதலீடு முடங்கியுள்ளது. இந்த படங்கள் மூலம் 1200 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மாஸ்டர் படத்தால் மட்டுமே 300 கோடி வரை வருவாய் முடங்கியுள்ளது.

 இது குறித்து தயாரிப்பாளர் கதிரேசன் கூறும்போது, ‘சினிமா உலகத்திற்கே இந்த ஆண்டு பெரும் இழப்புதான். தமிழ் சினிமாவும் கடந்த 8 மாதங்களில் நொறுங்கிப்போயுள்ளது. இதிலிருந்து மீண்டு வருவது எளிதான விஷயமில்லை. ₹500 கோடிக்கு மேல் போட்ட பணம் முடங்கியுள்ளது. இந்த பேரிழப்பிலிருந்து மீள, தயாரிப்பாளர்கள் மட்டும் ஒன்று சேர்ந்தால் முடியாது. ஒட்டு மொத்த திரையுலகமும் கைகொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அடுத்த ஏப்ரல், மே மாதத்துக்குள் சூழ்நிலை சீராகலாம். பொங்கலுக்கு பிறகு பெரிய படங்கள் திரைக்கு வந்து, தமிழ் சினிமாவை காப்பாற்றும் என நம்பிக்கையில் இருக்கிறோம்’ என்றார்.

Related Stories: