நண்பருடன் நிச்சயதார்த்தம் அமலாபாலின் நெருக்கமான படம் வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகை அமலாபாலுடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட முன்னாள் நண்பருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகை அமலாபாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பவ்னிந்தர் சிங்குக்கும், ராஜஸ்தானில் 2019ல் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அமலாபாலுக்கும், தனக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி, நிச்சயதார்த்தத்தின் போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதற்கு அமலாபால் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங்கிடம் நஷ்ட ஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாபால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரான அமலாபாலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு டிசம்பர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கவும் பவ்னிந்தர் சிங்க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: