தெலுங்கு கங்கா திட்டப்படி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 3 டிஎம்சி நீர் திறப்பு: மேலும் 1 டிஎம்சி தர வாய்ப்பு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தற்போது வரை 3 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீரும் தர வேண்டும். ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் நீர் இருப்பு குறைவாக இருப்பதை காரணம் காட்டி கண்டலேறு அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை.  இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கடந்த ஆகஸ்ட மாதத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் செப்டம்பர் 20ம் ேததி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்டிற்கு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் குறைவாக தண்ணீர் வந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 727.67 கன அடிவரை தமிழக எல்லைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வரை 3.06 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும், 1 டிஎம்சி தமிழகத்துக்கு திறக்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, இம்மாதம் இறுதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: