×

கயல் ஆனந்தி ஜோ ஆனது எப்படி?

நன்றி குங்குமம் தோழி

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தில் கல்லூரி மாணவியாக தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக  நடித்திருக்கிறார் கயல் ஆனந்தி.“தமிழ் சினிமாவில் எனக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘பரியேறும் பெருமாள்’ ” என்கிற வெற்றிக் களிப்பில் இருந்தவரிடம் இந்த அனுபவம் குறித்து பேசினேன்.

“நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு நாள் எனக்கு போன் வந்தது. ஒரு நல்ல கதை இருக்கிறது என்றார்கள். ரஞ்சித் சார் தயாரிப்பு என்றால் நிச்சயமாக ஒரு நல்ல கதையாகத்தான் இருக்கும். நல்ல திரைப்படங்களை மட்டும்தான் அவர்கள் எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உடனே கதை கேட்க சம்மதித்தேன். மாரி செல்வராஜ் சார் கதை சொன்னார்.

கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாரி சார் கதை சொல்லும் போதே இந்த படம் வெளியான பிறகு பொதுச்சமூகத்தில் ஒரு நல்ல உரையாடல் தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் நினைத்தது போலவே நடந்தது. இந்த உரையாடல் நடக்கும் என்று படம் தொடங்கும் போதே எங்களுக்கு தெரியும்.

அந்த விதத்தில் மாரி செல்வராஜ் சார் மிகக் கவனமாக யார் மனதையும் புண்படுத்தாமல் இதைத் துவக்கி வைத்திருக்கிறார். ஜோதி மகாலட்சுமி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்ணை மூடிக்கிட்டே லவ் ப்ரப்போஸ் பண்ணுற சீன். ஜோதியோட அப்பா கதாநாயகனை எவ்வளவு கொடுமை செய்தாலும் அதைப்பற்றி தெரியாத வெகுளித்தனமான ஒரு பெண்ணாக நடிப்பது அவ்வளவு பிடித்து இருந்தது.

ஜோதி மகாலட்சுமி என்கிற கேரக்டர் உண்மையாகவே இருந்த ஒரு கேரக்டர். அந்த கேரக்டராக நான் எப்படி இருக்கப்போகிறேன் என்று எனக்குள் ஒரு பெரிய கனவே இருந்தது. அந்த அளவுக்கு அந்த கேரக்டரை நான் காதலித்தேன். நான் 10 ஆம் வகுப்பு வரைதான் பள்ளிக்குச் சென்று படித்தேன். என்னுடைய உயர் கல்வி எல்லாம் தொலைதூரக் கல்விதான்.

இப்போது எம்.பி.ஏ.வும் அப்படித்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். தினமும் வகுப்பிற்கு சென்று சக மாணவர்களோடு உரையாடி, விளையாடும் அனுபவம் எனக்கு கிடைத்தது இல்லை. இந்தப் படத்தின் மூலம் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது. செட்டில் என்னை எல்லோரும் ‘ஜோ’ என்றுதான் அழைப்பார்கள். கயல் ஆனந்தியா இருந்த எனக்கு ஜோ என்று இன்னொரு அடையாளம் கொடுத்தது இந்தப் படம்தான்.

நான் மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு பெயரை அவரவர் கேரக்டர் கொடுத்திருக்கிறது. படம் பார்த்து எனக்கு வாழ்த்து சொன்னவர்கள் படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு எல்லோர் மனதிலும்  எல்லா கேரக்டர்களும் ஆழமாக பதிந்திருப்பதை உணர முடிந்தது.

படக்குழுவுடன் வேலை பார்த்தது என்னால் மறக்கவே முடியாது. 47 நாள் ஹூட்டிங் முடித்துவிட்டு வெளியே வரும் போது அவ்வளவு வருத்தமாக இருந்தது. இந்தப் படம் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். என்னுடைய வாழ்நாளில் எப்போதும் அவர்கள் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பார்கள். படம் வந்த முதல் நாளே படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை கூட சிலர் போன் பண்ணி உங்க படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் ஃபுல்லா ஓடிட்டு இருக்கு என்று சொல்லும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. கதிரோடு நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அவருடைய நடிப்பு அவ்வளவு இயல்பாக இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார்.

ஒவ்வொரு டேக் போகும்போதும் கவனமாக இருப்பார். அடுத்து மூடர் கூடம் நவீன் சார் கூட ஒரு படமும், டைட்டானிக் என இரண்டு படங்கள் முடித்திருக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் சாரோட ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஜோ. ஸாரி.... ஆனந்தி.                                  


-ஜெ.சதீஷ்

Tags : Kayal Anandhi Joe ,
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!