ஊத்துக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது: ஆபத்தை உணராத பொதுமக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த தடுப்பணையில் ஆபத்தை உணராமல் கிராம மக்கள் கும்பல் கும்பலாக குளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரும், நேற்று முன்தினம் பிச்சாட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சுருட்டபள்ளிக்கு வந்தது. இவற்றின் உபரி நீர் வருகையால், தற்போது ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால், ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஒருசிலர் தடுப்பணையின் ஆழம் தெரியாமலும், ஆபத்தை உணராமலும் குளித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சிட்ரபாக்கத்தில் கட்டப்பட்ட தடுப்பணையால் விவசாயிகள் பயன்பெற்று வருகிறோம். கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழைக்கு இந்த தடுப்பணையின் கரைகள்  முழுவதுமாக சேதடைந்தது. எனவே,  ஊத்துக்கோட்டை தரைப்பாலத்தில் இருந்து சிட்ரபாக்கம் தடுப்பணை வரை ஆற்றின் இருபுறமும்  கரைகளை பலப்படுத்த வேண்டும். ஏனென்றால், அரசு  மணல் குவாரிக்கு விடப்பட்டதால் கரைகளும் சேதமடைந்துள்ளது. மேலும்,  கரைகளை பலப்படுத்தினால் கோடை காலம் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால், நாங்கள் பயன்பெறுவோம்’ என்றனர்.

Related Stories: