கொரோனாவால் மக்கள் பீதி தமிழகம் முழுவதும் வெறிச்சோடிய தியேட்டர்கள்

சென்னை: கொரோனா பரவும் என்ற பீதி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் விரைவிலேயே தியேட்டர்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இதில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தீபாவளியை ஒட்டி திறக்கப்பட்டன. இந்த தியேட்டர்களில் சந்தானம் நடித்த பிஸ்கோத், மாரிஜுவானா, இரண்டாம் குத்து, தட்றோம் தூக்றோம் ஆகிய புதிய படங்கள் திரைக்கு வந்தன. ஊரடங்குக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தாராள பிரபு ஆகிய படங்களும் மீண்டும் திரையிடப்பட்டன. தியேட்டர்கள் திறந்தாலும் படம் பார்க்க மக்கள் யாரும் தியேட்டர்களுக்கு வரவில்லை. கொரோனா பயத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வரவே அச்சப்படுகின்றனர்.

இதனால் மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.  தியேட்டர்களில் படம் பார்க்க செல்பவர்களால் கொரோனா பரவுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபாவளி தினத்திலும் மற்ற விடுமுறை நாட்களிலும் கூட தியேட்டர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு தியேட்டரில் ஒரு காட்சிக்கு 5 சதவீதம் பேர் கூட இருப்பதில்லை. இதனால் பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்துவிட்டனர். டிக்கெட்டுக்கு வாங்கிய பணத்தையும் ரசிகர்களுக்கு திருப்பி தந்துவிடுகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. மேலும் தியேட்டர்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் சரிவர மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு புதிய படங்கள் வெளியாகும்போது, மக்கள் குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பார்கள். இந்த தீபாவளி சமயத்தில் யாரும் குடும்பத்தாருடன் தியேட்டர்களுக்கு செல்லவில்லை. கொரோனா பரவும் பீதியால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியான புதிய படங்களுக்கு இருந்த வரவேற்பு, தியேட்டர்களில் வெளியான படங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கேரளாவில் தியேட்டர்கள் மூடல்

கொரோனா பரவல் காரணமாக, தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் பெங்களூரில் பல தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் கேரளாவிலும் தியேட்டர்கள் மூடப்பட்டன. கேரளா மாநிலம் முழுவதும் 700க்கும் அதிகமான தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் மக்கள் தியேட்டருக்கு வர அச்சப்படுவதால் கூட்டம் சேரவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து கேரளாவில் அனைத்து தியேட்டர்களும் நேற்று திடீரென மூடப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் இந்த தியேட்டர்களை மீண்டும் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: