நாளை சென்னை வருகை உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க உத்தரவு: கட்சி தலைமை அறிவிப்பால் மூத்த தலைவர்கள் அதிருப்தி

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வந்து அரசு மற்றும் பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாஜவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை (21ம் தேதி) தமிழகம் வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் 21ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ₹380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் அரசு விழாவில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அமித்ஷா அரசு விழாவுக்கு வருகிறார் என்று கூறப்பட்டாலும், சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜவுக்கு 50 இடங்களை கேட்டுத்தான் வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று (20ம் தேதி) மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கூடுதல் சீட் கேட்டு பாஜ கொடுக்கும் நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர் நாளை பங்கேற்கும் அரசு விழாவில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் அந்த மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படும். ஆனால், அமித்ஷா கலந்து கொள்ளும் விழாவில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது இதுதான் முதல்முறை. கட்சி தலைமையின் உத்தரவுக்கு பல அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் ஆட்சி தொடர மத்திய பாஜ தலைவர்களின் ஆதரவு தேவை என்பதால், அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் நாளை அமித்ஷா பங்கேற்கும் அரசு விழாவில் கலந்து கொள்வார்கள்” என்றார்.

Related Stories: