திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் வழக்கம் போல் கடற்கரையிலேயே நடைபெறும்: தமிழக அரசு

மதுரை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 20ம் தேதி சூரசம்ஹாரம் வழக்கம் போல் கடைக்கரையில் நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வினை கண்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் வழக்கம் போல் நடைபெறாது என்றும் சூரசம்ஹாரத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் ஆண்டு ஆண்டுகாலமாக கடற்கரையில் மட்டுமே நடைபெறும் சூரசம்ஹாரத்தை கடற்கரையிலேயே நடத்த உத்தரவிட வேண்டும். கந்த புராணத்திலும் இம்முறையே கூறப்பட்டுள்ளது. எனவே அந்த நடைமுறையை மாற்றக்கூடாது என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 20ம் தேதி சூரசம்ஹாரம் வழக்கம் போல் கடைக்கரையில் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். திருக்கல்யாணம் கோயில் உள்பிரகாரத்தில் 21ம் தேதி 108 மகா தேவர் சன்னதி அருகே நடைபெறும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா சூழலில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் சூரசம்ஹார நிகழ்வை நடத்த வேண்டும். முருக பக்தர்கள் காணும் வகையில், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வுகளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் பாகுபாடின்றி ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தி ராம்குமார் ஆதித்யன் தொடர்ந்த வழக்கினை முடித்து வைத்தனர்.

Related Stories: