திருப்போரூர் அருகே பரபரப்பு அடுக்குமாடி குடியிருப்பு அருகில் வெடிகுண்டு?

திருப்போரூர்: திருப்போரூர் அருகே குடியிருப்பு பகுதியில் கண்ெடடுத்த மர்ம பொருளை கல்குவாரிக்கு எடுத்து சென்று, அது வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என சோதனை நடத்தப்படுகிறது.திருப்போரூரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலை, அம்மாப்பேட்டை கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புக் வெளியே பஸ் நிறுத்தம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இக்குடியிருப்பில் வசிக்கும் சிலர், நேற்று மாலை நடைபயிற்சி செய்ய வெளியே வந்தனர். அப்போது, பஸ் நிறுத்தம் அருகே களிமண்ணால் பூசிய நிலையில் உருண்டையான பொருள் கிடந்தது. அதில், 2 மின்வயர்கள் வெளியே நீட்டி கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மூலம் காயார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, காயார் எஸ்ஐ ஆறுமுகம், நெல்லிக்குப்பம் விஏஓ சத்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, கிடந்த பொருள் வெடிகுண்டு போல் இருந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் சாலை என்பதால், அந்த மர்ம பொருளை பாதுகாப்பாக அகற்றி முருகமங்கலம் கல்குவாரிக்கு எடுத்து சென்றனர். வெடிகுண்டு பிரிவு போலீசார் ஆய்வு செய்த பின்னர், அந்த மர்மபொருள் வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

Related Stories: