மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி மண்டல அலுவலகத்தில் முற்றுகை

திருவொற்றியூர்: மணலி மண்டலத்திற்கு உட்பட்ட மாத்தூர் 19வது வார்டில் ஆம்ஸ்ட்ராங் நகர், கவித்தென்றல், கல்யாண சுந்தரனார் நகர், சிபிசிஎல் நகர் போன்ற பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் வீடுகளுக்குள் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் மண்டல அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். சாலையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனை பராமரிப்பில் உள்ள மற்றொரு ஏரியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்து, வீணாகும் மழைநீரை சேமிக்கும் வகையில் மாத்தூர் ஏரியை தூர்வாரி கரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் ஏரி புனரமைப்பு குழு மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள்  மணலி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மண்டல உதவி ஆணையரிடம் அவர்கள்  மனு அளித்தனர்.

Related Stories: