விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து கோவையில் 22ம் தேதி விவசாயிகள் எழுச்சி மாநாடு, ஏர் கலப்பை பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து வரும் 22ம் தேதி கோவை கருமத்தம்பட்டி, சோமனூர் மெயின் ரோட்டில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.30 மணியளவில் நிறைவாக ஏர் கலப்பை பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  இதில், தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னணி தலைவர்களுடன் நானும் பங்கேற்கிறேன்.  நவம்பர் 28ம் தேதி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணியை நடத்துகின்றனர். கள்ளக்குறிச்சியில் நான் பங்கேற்கிறேன்.

தங்கபாலு சேலத்திலும், ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டிலும், திருநாவுக்கரசர்  திருச்சியிலும் பங்கேற்கிறார்கள். இந்த மாதத்துக்குள் எஞ்சியுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். பலகட்ட போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: