பழுதடைந்தவற்றை அகற்றி விட்டு புதிய மின் மீட்டர்கள் பொருத்த திட்டம்: இழப்பை தவிர்க்க வாரியம் அதிரடி

சென்னை: தமிழ் நாடு மின்சார வாரியம் பழுதடைந்த மின் மீட்டர்களால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க, அவற்றை அகற்றி புதிய மின் மீட்டர்களை பொருத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3 கோடிக்கு மேலான மின்இணைப்புகள் உள்ளன. மின்வாரிய விதிமுறைகளின்படி ஒவ்வொரு இணைப்பிலும் எவ்வளவு மின்சாரம் செலவு செய்யப்படுகிறது என்பதை கண்காணிப்பதற்காக வாரியம் மீட்டர்களை பொருத்தியுள்ளது. இதில் வீடு சார்ந்த மின்இணைப்பு பயன்பாடு குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்து கட்ணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சில இடங்களில் மின்இணைப்புகளில் உள்ள மின்மீட்டர்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவை வாரியத்தால் துள்ளியமாக கணக்கெடுக்க முடியவில்லை. அப்போது வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த வருவாய் இழப்பை தவிர்க்கும் விதமாக பழுதடைந்த மின் மீட்டர்களுக்கு பதிலாக புதிய மின் மீட்டர்களை பொருத்துவதற்கு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பழுதடைந்த மீட்டர்களால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டது. அதன்படி பழுதடை மின்மீட்டர்கள் சென்னை வடக்கில் ஒருமுனை மின்மீட்டர்கள்-912, மும்முனை-1,527; சென்னை தெற்கில் ஒருமுனை-1,686, மும்முனை-2,145; கோவையில் ஒருமுனை- 877, மும்முனை-513; ஈரோட்டில் ஒருமுனை-717, மும்முனை-382; மதுரையில் ஒருமுனை-1,317, மும்முனை-213, திருச்சியில் ஒருமுனை-4048, மும்முனை-686 மீட்டர்கள் பழுதடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் திருநெல்வேலியில் ஒருமுனை-1,245, மும்முனை-216; வேலூர் ஒருமுனை-1058, மும்முனை-256; விழுப்புரத்தில் ஒருமுனை-1356, மும்முனை-302 என மொத்தம் ஒருமுனை மின்மீட்டரில் 12,216 மின்மீட்டர்களும், மும்முனை இணைப்பில் 6240 மின்மீட்டர்களும் பழுதடைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட இடங்களில் புதிய மீட்டர்களை பொருத்த வாரியம் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: