400 கோடி மக்களுக்கு ‘அதுக்கு’ வழி இல்லை: இன்று நவ.19 சர்வதேச கழிப்பறை தினம்

நெல்லை: கடந்த 2001 நவம்பர் 19ம் தேதி ‘ஜாக் சிம்’ என்பவரால் உலக கழிப்பறை அமைப்பு நிறுவப்பட்டது. 2013ம் ஆண்டு ஐ.நா.பொது சபையில் 122 நாடுகளின் ஆதரவோடு, இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை சர்வதேச கழிப்பறை தினமாக அனுசரிப்பது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி சர்வதேச கழிப்பறை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  2030ம் ஆண்டுக்குள் உலகிலுள்ள அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் கிடைப்பதற்கு, நிலையான வளர்ச்சி இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்த வேண்டும். கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சரியான முறையில் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்து, பாதுகாப்பாக வேறுவகையில் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதை அதிகரிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 சர்வதேச அளவில் 400 கோடி மக்களுக்குக் கழிப்பறை போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. உலகில் 3ல் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லை. சுகாதார சீர்கேடுகளால் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் வரை இறக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். கழிப்பறையை பயன்படுத்துவதன் மூலம் தனிநபர் அந்தரங்கம் பாதுகாக்கப்படுகிறது. சுத்தமும் சுகாதாரமும் மேம்படுகிறது. கழிவறை சார்ந்த சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அதற்கான செலவுகளை குறைக்கலாம்.

Related Stories: