முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வா?: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்  தேர்வு என்ற அறிவிப்புக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர்  பிஜிஐஎம்இஆர் போன்ற 11 கல்லூரிகளில், 2021-ல் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த அறிவிப்பு  வெளியிட்டு, தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்களை ஒதுக்கி அடாவடியாகக் குழப்பங்களைச் செய்து  கொண்டிருப்பது அநீதியின் உச்சக்கட்டமாகும். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால்  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் 1500 ரூபாய் செலுத்தினாலே போதும் என்று இன்னொரு பேதமும், துரோகமும்  இழைக்கப்பட்டுள்ளது.

தங்களின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்  அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது என்றால், ஏன் இந்த முரண்பாடு? அரசியல் சட்டத்தால் இந்தியா  முழுமைக்கும் கூறப்பட்டுள்ள சமூகநீதி, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் மட்டும்  எப்படி வேறுபடும்? மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்விகளுக்குச் சேர்க்கப்படும் அரசு மருத்துவர்களே நீட் தேர்வு எழுதித்தான் சேர  வேண்டும் என்று கெடுபிடி செய்யும் மத்திய பாஜ அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகளில் மட்டும் நீட் வேண்டாம் என்று கூறி, தனி  நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன்? சமூகநீதியை எங்கெல்லாம் சிதைக்க முடியுமோ, எங்கெல்லாம் சூறையாடமுடியுமோ அங்கெல்லாம், அனைத்து  காரியங்களையும், மத்திய பாஜ அரசு கண்மூடித்தனமாகச் செய்து, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நசுக்கி அடியோடு நாசப்படுத்தி வருவது கடும்  கண்டனத்திற்குரியது.

ஆகவே, மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய பாஜ அரசு இப்போது அனுமதி  வழங்கி விட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறேன். அதே போல் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லாமலேயே முதுநிலை மருத்துவக் கல்விக்கு மாணவர்  சேர்க்கை நடத்திடவும், அந்த மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிடவும்  அனுமதித்திட வேண்டும் என்று பாஜ அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த 11 மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள  சலுகைகளை மனதில் கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுத்து, தமிழகத்திலும் நீட்  தேர்வு இன்றி முதுநிலை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்கவும், அதில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை  செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

இது தவிர, தமிழகத்திலுள்ள 584 “மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளுக்கான” இடங்களில் அரசு மருத்துவர்களுக்குப் போராடிப் பெற்ற 50 சதவீத  உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவரை கலந்தாய்வு நடத்தாமல் அரசு காலம் கடத்துவது கவலை அளிக்கிறது. முதலமைச்சர் உடனடியாக  கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  கூறியுள்ளார்.

சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்ைம  செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் பொன்முடி, எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், கட்சியின் செயல்பாடு எவ்வாறு உள்ளது, சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும்  கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான ‘க்ரியா’ பதிப்பகம் ராமகிருஷ்ணன்  கொரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தாங்க முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. மரணப்படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்கு திமுக சார்பில், ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: