5ம் வகுப்பு மாணவியை அடித்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை : மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: ஐந்தாம் வகுப்பு மாணவியை அடித்த தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த புத்திரன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாணவர்கள் படிக்கின்றனர்.  இதில் 5ம் வகுப்பு மாணவிகள் பள்ளி  வளாகத்தை சுத்தப்படுத்துவது வழக்கம். கடந்த 2019ம் ஆண்டு 5ம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தபோது,  நுழைவாயில் சாவியை தொலைத்து விட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை தேவி, அந்த மாணவியை கடுமையாக திட்டி அடித்துள்ளார். இதில் வலி தாங்காமல் மாணவி கீழே  விழுந்துள்ளார்.

தகவலறிந்து வந்த கிராமத்தினர் மாணவியை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரத்தை மாநில மனித  உரிமை ஆணைய பொறுப்பு  தலைவர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.அதில், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, தலைமை ஆசிரியை தேவி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இதற்காக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு தமிழக அரசு இழப்பீடாக ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகையை தலைமை  ஆசிரியையிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். மேலும், தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதி  உத்தரவிட்டார்.

Related Stories: