இன்று முதல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு

* தமிழக அரசு ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் * போலி இருப்பிட சான்று தயாரிப்பா? * ஆதாரங்களுடன் அம்பலம்

சென்னை: மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் இன்று தொடங்க உள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப்  பட்டியலில் இடம்பெற்ற பலரது பெயர்கள் பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் தெலங்கானா அரசு மருத்துவ படிப்பு ரேங்க் பட்டியலிலும்  இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் மாணவர்களிடையே  குழப்பம் ஏற்பட்டுள்ளது.நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 16 ஆயிரம் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய  அளவிலான நுழைவு தேர்வு (நீட்) கடந்த மே 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில்  இருந்து 15 லட்சத்து 97 ஆயிரத்து 435 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு  அறிவிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்வுடன் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மே மாதம் நடக்க வேண்டிய நீட் தேர்வு நடத்தப்படாமல் கால  தாமதமாகி வந்தது.

 இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 13 லட்சத்து 66 ஆயிரத்து 945 பேர்  எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வு எழுத 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 99 ஆயிரத்து  610 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் 57 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்கை விரைவில் தொடங்க வேண்டும் என்று  பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல, நீதிமன்றமும் கருத்து தெரிவித்து இருந்தது. அதன்பேரில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  கவுன்சலிங்கில் பங்கேற்க நவம்பர் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றுமருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது. இதையடுத்து, 24,712 பேர் விண்ணப்பித்தனர். அதில் 23,707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

நேற்று முன்தினம் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான  (7.5%) உள் இடஒதுக்கீட்டு பட்டியல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டன.  அத்துடன் மேற்கண்ட 3 பட்டியல்களில் முதல் 10 இடங்கள் பெற்றுள்ள மாணவ, மாணவியர் விவரம் வெளியிடப்பட்டது. ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் சுகாதாரத்துறை இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான  விவரங்களை தேடினர். அப்போது, மருத்துவ ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல மாணவர்களின் பெயர்கள், நீட் தேர்வுக்கான பதிவு எண்கள்  கேரளா, தெலங்கானா மாநிலங்களில் வெளியான ரேங்க் பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், மருத்துவ ரேங்க்  பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இணைய தளம், டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பகிர்ந்தனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் 2020-21க்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பின் அரசு ஒதுக்கீட்டு பட்டியலில் டாப் 10 மாணவர்கள் பட்டியலில் 705 மார்க்  எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ள மோகனப்பிரியா ரவிச்சந்திரன் (பிசி) என்ற மாணவி,  கேரள மாநில  மருத்துவ ரேங்க் பட்டியலில் 5ம்  இடம்பெற்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது. இதனால், அவர் இரு மாநிலத்திலும் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் வெளியிடப்பட்ட ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும்  இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வில் பதிவு எண் 2702105444 (பூஜிதா பழனி), 4201120146 (ருகேஷ் பிரானேஷ்), 1204002253 (நுகல சிவக்குமார் யுனிஷா),  4112006470 (சித்தார்த்தா), 1204006091 (வர்ஷினி கோமதி), 4102104078 (ஷியாம் சரண்), 4101122125 (சாய் சுகிதா) ஆகியோர் இரு மாநிலங்களில்  விண்ணப்பித்துள்ளது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. இவர்கள் தெலங்கானாவில் உள்ளூர் முகவரியில் இருந்தே விண்ணப்பித்துள்ளதாக அந்த  பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 7 பேரும் இதர பிரிவினர்(ஓ.சி) என்ற பிரிவின் கீழும் விண்ணப்பித்துள்ளதாக தெலங்கானா ரேங்க்  பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மோகனப்பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேரும் எப்படி அந்த மாநிலங்களில் உள்ளூர் முகவரியை பெற்றனர், அவர்களுக்கு எப்படி  இருப்பிட சான்று வழங்கப்பட்டது என்பது குழப்பமாக உள்ளது.

 ஒரே நபருக்கு இரண்டு இருப்பிட சான்று எப்படி கிடைத்தது என்றும் பொதுமக்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். மற்ற 7 பேரும் தமிழகத்தைச்  சேர்ந்தவர்களா அல்லது தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இரு மாநிலத்திலும் அவர்கள் உள்ளூர்  முகவரி கொடுத்தே விண்ணப்பித்துள்ளனர். ஆனால், மோகனப்பிரியா நாமக்கல் முகவரியைத்தான் தமிழகத்திலும், கேரளாவிலும் கொடுத்துள்ளார்.  ஆனாலும், இரு மாநிலத்திலும் அவர் எப்படி விண்ணப்பித்தார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் இன்று துவங்குகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில்  முறைகேடு நடந்திருப்பது தொடர்பான ஆதாரங்கள் அம்பலமாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு பற்றிவிசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு  அதிகாரிகள் இருப்பிட சான்றிதழை சரிபார்ப்போம் என்று அறிவித்துள்ளனர். ஆனால், போலியான இருப்பிட சான்று வாங்கி வருபவர்களை எப்படி  அவர்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவில்லை. போலீஸ் மூலம் நேரடியாக அவர்கள் முகவரி கொடுத்த இடத்தில்  விசாரித்தால்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதை மருத்துவத்துறை அதிகாரிகளால் செய்ய முடியாது. இதுபோன்ற முறைகேடுகளை தமிழக  அரசு எப்படி களையப்போகிறது என்ற சந்தேகமும், பீதியும் மாணவர்களிடம் எழுந்துள்ளது.

மோசடி நடப்பது எப்படி?

மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவ மாணவியரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்து, அவர்கள் வெளி மாநிலங்களில்  பணியாற்ற சென்றுவிட்டால், இருப்பிடச் சான்று தமிழகத்தை காட்டும் நிலை ஏற்படும். அதேநேரம் பெற்றோர் பணியாற்றும் மாநிலத்திலும் ஒரு  இருப்பிட சான்று பெற்று விடுவார்கள். இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இங்கு தான் மோசடிகள் தொடங்குகின்றன. இது போல ஒவ்வொரு  ஆண்டும் பல மாணவர்கள் இரண்டு இருப்பிட சான்றுகளை காட்டி கவுன்சலிங்கில் பங்கேற்று தங்களுக்கு வசதியான கல்லூரிகளில் இடம்  பெற்றுவிடுகின்றனர். இதை மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஏன் கண்டுபிடிப்பது இல்லை என்று குறை உள்ளது. மேலும் கடந்த ஆண்டும் இது  போல சில இருப்பிட சான்று பெற்று வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

Related Stories: