பக்கவாட்டு சுவரில் வளர்ந்துள்ள மரக்கன்றுகள் சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் தொடர் மழையின் காரணமாக விரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக உள்ள இப்பாலத்தின் வழியே தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், கனரக வாகனங்களும், கார்களும் சென்று வருகின்றன. மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பெருநகரங்களையும், மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய பாலமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதால் விரிசல் விட்டும், ஓட்டை விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பாலத்தில் மண் குவியல்கள் குவிந்துள்ளதால் சாலையில் மழைநீர் தேங்கி செடிகள் முளைத்துள்ளது. பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தும், ஆலங்கன்றுகளும், ஒதியன் கன்றுகளும் வளர்ந்து வருவதால் பாலம் வலுவிழந்து வருகின்றது. பாலத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த சோலார் பல்புகள் பழுதாகி இரவு நேரங்களில் பாலம் இருண்டு கிடப்பதால் வாகனஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதிய பாலத்தை தர ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். சோலார் மின்விளக்குகளையும் சரி செய்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: