குமரி கலெக்டர் ஆபீசில் நேர்காணல் சமையலர், துப்புரவு பணிக்கு திரண்ட பட்டதாரிகள்

நாகர்கோவில்: சமையலர், துப்புரவு பணிக்கு நடைபெற்ற நேர்காணலுக்கு  குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் பட்டதாரி  பெண்களும் திரண்டனர். குமரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சமையலர் 12 பணியிடங்கள், துப்புரவாளர் தொகுப்பூதியத்தில் 4  பணியிடங்கள், காலமுறை ஊதியத்தில் துப்புரவாளர் ஒரு பணியிடம் என 17 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.இதற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். குமரி மாவட்டத்தில் குடியிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க  வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும், சமையல் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான விண்ணப்பம் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான நேர்காணல் நாகர்கோவிலில், குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக  வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடந்தது. நேற்று காலை கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கானோர்  குடைபிடித்துக்கொண்டு நேர்காணலுக்கு திரண்டிருந்தனர். அவர்கள், சமூக இடைவெளியின்றி, நெருக்கமாக நீண்ட வரிசையில் முண்டியடித்து  நின்றிருந்தனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரிகளும் சமையல் மற்றும் துப்புரவு  வேலைக்கு திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இரவு 8 மணிக்கு பின்னரும் நேர்முக தேர்வு தொடர்ந்து நடந்தது.

Related Stories: