தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்கியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால், பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான  இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2  நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. சென்னை புறநகர்  பகுதியில் பெய்த மழை காரணமாக குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை என்ற  டிவிட்டர் பதிவில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில்  குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம்.  பழைய கட்டிடங்களில் தங்கவும், அருகில் செல்லவும் வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி  பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இடி, மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்த கூடாது.  

மரத்தின் அடியில் நிற்க கூடாது. திறந்தவெளியில் இருக்க கூடாது. நீர்நிலைகளில் குளிக்க கூடாது. தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை  ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் மற்றும் ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு,  மண்எண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச் லைட், முகக்கவசங்கள் வாங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Related Stories: