105 டாமின் தொழிலாளர்களுக்கு இடைக்கால பாக்கி தொகை 10 ஆயிரம் தரவேண்டும்: தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இடைக்கால பாக்கி தொகையாக 10 ஆயிரத்தை 105 டாமின் குவாரி தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்  என்று தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு (டாமின்) சொந்தமான எள்ளிகரடு, கருங்கல் அணை ஆகிய குவாரிகள் உள்ளன. இந்த  குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களில் 118 பேரை பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்தும் தொழிலாளர்களை பணியில் சேர்க்க வேண்டும்  எனக்கோரியும், சம்பள பாக்கித் தொகையை தரக்கோரியும் தர்மபுரி மாவட்ட கனிம தேசிய தொழிலாளர் சங்கம், மேட்டூர் பொது ஊழியர்கள் சங்கம்  சார்பில் சென்னையில் உள்ள தொழிலாளர் தீர்ப்பாயத்தில் கடந்த 2001ல் வழக்கு தொடர்ந்தனர். இதில் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு  கிடைத்தது. ஐகோர்ட்டிலும் அதே  தீர்ப்பு உறுதியானது.

அதன் பிறகு டாமின் செய்த மேல்முறையீட்டை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, டாமின் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு 2014ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  தொழிலாளர்களுக்கு டாமின் பாக்கி தொகையை தரவில்லை என்று கூறப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட டாமின் அதிகாரிகள் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார்.இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டாமின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அதில், டாமின் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை கருத்தில்கொண்டு 105 தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக தலா ₹10 ஆயிரம் தர முடிவு  செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால நிவாரணமாக 105 தொழிலாளர்களுக்கு தலா ₹10 ஆயிரத்தை இடைக்கால பாக்கி தொகையாக டாமின்  தரவேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களது அடையாளத்தை காட்டுவதற்காக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை  மற்றும் பணிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை நவம்பர் 18, 19, 20ம் தேதிகளில் குவாரியின் மேலாளரை சந்தித்து காட்ட வேண்டும். அதை  சரிபார்த்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ரொக்கமாகவோ அல்லது அவர்களின் வங்கி கணக்கு மூலமாகவோ டாமின் நிர்வாகம் தர வேண்டும்.  இந்த நடைமுறைகளை அமல்படுத்தி டிசம்பர் 2ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை  தள்ளிவைத்தார்.

Related Stories: