ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரின் உடல் கரை ஒதுங்கியது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன், சமையல் மாஸ்டர். இவரது மகன் அருள்ராஜ் (19), மகள்  துர்கா (14). அரியலூரில் வாடகை வீட்டில் தங்கி அருள்ராஜ் தனியார் பொறியியல் கல்லூரியிலும், துர்கா 10ம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும்  தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அருள்ராஜ், துர்கா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் பாபுவின் மகன் விஷ்ணு (14), ஜான்சனின் குழந்தைகளும்,  இரட்டையர்களுமான மார்ட்டின் (13), மார்க்ரேட் (13) ஆகிய 5 பேர் குடும்பத்துடன் காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் குளித்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி துர்கா, விஷ்ணு, மார்ட்டின், மார்க்ரேட் ஆகியோர் கடலுக்குள் இழுத்து  செல்லப்பட்டனர். இவர்களை மீட்க முயன்ற அருள்ராஜும் கடலில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறி கூச்சலிட்டனர்.  சத்தம் கேட்டு அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து சிறுவர்களை தேடினர்.

இதில் அருள்ராஜ் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மாயமான சிறுவர்களை தேடும் பணியில் வடக்கு மண்டல தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில்  வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் ராயபுரம், திருவொற்றியூர், மெரினா ஆகிய பகுதிகளில் இருந்து கடலில் பிரத்யேகமாக நீந்த கூடிய தீயணைப்பு வீரர்கள்  25 பேர் வரவழைக்கப்பட்டு படகுகள் மூலம் தேடினர். மீட்கப்படும் சிறுவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் 3  ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடல் சீற்றம் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே கடற்கரையில் மார்ட்டின், விஷ்ணு ஆகியோர் உடலும், திருவொற்றியூர்  கடற்கரையில் மார்கிரேட் உடலும்,  காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள பழைய வார்ப்பு பகுதியில் துர்கா உடலும் கரை ஒதுங்கியிருப்பதாக  காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: