வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் கடும் சிரமம்; புதிய கழிவறை கட்டிடம் திறக்கப்படுவது எப்போது?...நாகராஜா கோயில் பக்தர்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ரூ.18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக  பூட்டப்பட்டு இருந்த கோயில் செப்டம்பரில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் நடைபெறுவதால், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கழிவறைகள் இயங்கி வந்தன. ஆனால் இந்த கட்டிடம் மிக மோசமான நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.

எனவே பக்தர்கள் வசதிக்காக ரூ.18 லட்சம் செலவில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னரும், புதிய கழிவறை கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. பழைய கழிவறை கட்டிடம் பூட்டப்பட்டு உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து பக்தர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், புதிய கழிவறை கட்டிடத்தில் இன்னும் செப்டிக் டேங்க் தோண்டும் பணிகள் நிறைவடையாமல் உள்ளதாக கூறி உள்ளனர். கட்டிடம் கட்டி முடித்து பல நாட்கள் ஆகி விட்டது. குழி தோண்ட எத்தனை நாட்கள் ஆக போகிறது. பக்தர்கள் மீது அக்கறை இல்லாமல் அறநிலையத்துறை உள்ளது. எனவே உடனடியாக செப்டிக் டேங்க் அமைத்து, கழிவறை கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றனர்.

Related Stories: