இந்தியா முழுவதும் புகழ்பெற்ற வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் மாரடைப்பால் காலமானார்..!!

சென்னை: வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் (52) வயது மதிக்கத்தக்க அருண்  மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனையின் உரிமையாளர் அருண் என்பவருக்கு காலை 8 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அருண், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசன் ஐ கேர் என்ற பிரம்மாண்டமான சாம்ராஜ்யத்தை நிறுவியவர் அருண். இந்தியா முழுவதும் 170க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நிறுவி பல்வேறு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி, கண் நோய் சம்பந்தப்பட்ட பல மருத்துவ சிகிச்சைகளை ஏழை, எளிய மக்களுக்கு சென்றடையும் வகையில் சேவை செய்து வந்துள்ளார்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு 2008ம் ஆண்டு வாசன் ஐ கேர் மருத்துவமனை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான செய்திக்குறிப்பையும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தொடர்பான பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: