ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாற்றில் திறந்த வெளியில் எரியூட்டப்படும் சடலங்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே வௌ்ளாற்றில் எரியூட்டப்படும் சடலங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆவுடையார்கோவில் அருகே வௌ்ளாறு ஓடுகிறது. அதிக மணல் வளம் உள்ள இந்த ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மணலை சிறிய அகப்பையில் தோண்டினாலே சுவையான, பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வந்தது. இந்த நிலையில் வௌ்ளாற்றில் பல்வேறு இடங்களில் இருந்த மணல் அள்ளப்பட்டதால், தற்போது அப்பகுதியில் நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல இடங்களில் மணல் அள்ளப்படாமல் உள்ளதால், அந்த பகுதியில் நீர்வளம் மிகுந்து உள்ளது.

இந்த நிலையில் ஆவுடையார்கோவில் பகுதியில் உயிரிழப்பவர்களை ஆவுடையார்கோவில் அருகே ஓடும் வௌ்ளாற்றில், தீரர் சத்தியமூர்த்தி பாலம் அருகே திறந்த வெளியில் எரியூட்டி வருகிறார்கள். இவ்வாறு பாலத்தின் அருகே சடலங்களை எரியூட்டுவதால், அப்பகுதியில் எரிக்கப்படும் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சடலத்தை எரிப்பதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் செல்லும் இடத்திலேயே சடலங்கள் எரிக்கப்படுவதால், எரியூட்டப்படும் சடலத்தின் எலும்பு மற்றும் எச்சங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் சடலங்களின் துகள்கள், மக்கள் வௌ்ளாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் பகுதிக்கும் சென்று, அங்கு ஊறும் தண்ணீரையும் மாசடைய செய்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: தமிழகத்தில் பண்டை காலம் தொட்டு சடலங்களை திறந்த வெளியில் எரியூட்டும் பழக்கம் இருந்து வந்தது. இவ்வாறு சடலங்களை திறந்தவெளியில் எரியூட்டுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால், தமிழக அரசு சடலங்களை திறந்த வெளியில் எரி்யூட்டுவதை தவிர்ப்பதற்காக அறந்தாங்கி போன்ற நகரங்களில் எரிவாயு மின்தகன மேடைகளை அமைத்துள்ளது. இவ்வாறு எரியூட்டப்படும் சடலங்களில் இருந்து வரும் புகை அதிக உயரமான புகை போக்கிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதேப்போல கிராமங்களில் கூட மேல்பகுதி மூடப்பட்ட தகன மேடைகளை அரசு அமைத்துள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் ஆவுடையார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் இறந்தவர்களின் சடலங்களை வௌ்ளாற்றில், போக்குவரத்து அதிகம் உள்ள பாலத்தின் அருகே அதுவும் தண்ணீர் செல்லும் பகுதியில் சடலத்தை எரிப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவுடையார்கோவில் பகுதியில் திறந்த வெளியில், போக்குவரத்து அதிகம் உள்ள பாலத்தின் அருகே, தண்ணீர் செல்லும் பகுதியில் சடலங்கள் எரியூட்டப்படுவதை தடுப்பதோடு, அப்பகுதியில் பாதுகாப்பாக சடலங்களை எரியூட்ட ஆவுடையார்கோவில் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் தகனமேடை அமைக்கவும் உத்தரவிடவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Stories: