சமூக வலைதளத்தில் போலி விளம்பரம் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணிடம் நகை அபேஸ்: தம்பதி கைது

துரைப்பாக்கம்: கன்னியாகுமரி மாவட்டம் பரக்கா வட்டுவிளை கிராமத்தை சேர்ந்த மினிமோல் (27), தனது தோழிகளுடன் கிண்டியில் தங்கி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில், சினிமாவில் நடிப்பதற்கு, செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை என சமூக வலைதளத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்தார்.அதில், குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேர்காணல் நடப்பதாகவும், அங்கு வரும்படியும் கூறியுள்ளனர். அதன்படி சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண், ‘‘நீ அணிந்திருக்கும் நகைகளை கழற்றி வைத்துவிட்டு, மேக்கப் டெஸ்ட்க்கு வா,’’ என கூறியுள்ளார்.

அதன்படி, நகைகளை கழற்றி வைத்துவிட்டு, முகம் கழுவ குளியலறை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, நகைகளுடன் அந்த பெண் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து, அடையாறு துணை கமிஷனர் விக்ரமிடம் புகார் அளித்தார். விசாரணையில், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த ராவின் பிஸ்ட்ரோ (30),  இவரது மனைவி திருவான்மியூரை சேர்ந்த தீபா (எ) செண்பகவல்லி (38) ஆகியோர், சமூக வலைதளத்தில் போலி விளம்பரம் செய்து, மோசடி செய்தது தெரிந்தது. அவர்களை ைகது செய்தனர்.

Related Stories: