சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நீர் கால்வாய் புனரமைக்க 25 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தவு

சென்னை: கிருஷ்ணா நீர் கால்வாய் புனரமைக்க 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர எல்லைப்பகுதியான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்ட் வரை 155 கி.மீட்டர் பயணித்து வந்தடைகிறது. அங்கிருந்து 25 கி.மீ பயணித்து பூண்டி எல்லைக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. பல ஆண்டுகளாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கால்வாயின் பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதை தொடர்ந்து, கடந்த 2016ல் ₹20 கோடியில் 10 கி.மீ தூரத்தில் கிருஷ்ணா கால்வாய் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதன்பிறகு கால்வாயின் மற்ற பகுதிகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால் நீர் கடத்தும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது.  

இதை தொடர்ந்து தமிழக எல்லையில் அதிகம் சேதமடைந்துள்ள கால்வாய் 3.88 கி.மீ முதல் 10 கிலோ மீட்டர் வரை 24.78 கோடி செலவில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், நபார்டு வங்கியின் நிதியுதவியின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து-பூண்டி கால்வாய் இடையே 3.88 கி.மீ முதல் 10 கி.மீ வரை கிருஷ்ணா நீர் கால்வாய் புனரமைக்கப்படுகிறது. இதில், சேதமடைந்துள்ள கால்வாய்களை பலப்படுத்த 21.70 கோடியும், ஜிஎஸ்டி வரி 2.60 கோடி, மண் பரிசோதனை, தரக்கட்டுபாட்டு ஆய்வு 21.70 லட்சம், புகைப்பட பதிவு, விளம்பரம், ஆவண கட்டணம் 4 லட்சம், தொழிலாளர் நல நிதி 21.70 லட்சம் என மொத்தம் 24.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.   கிருஷ்ணா கால்வாய் புனரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்க முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: