சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை அமித்ஷா 21ம் தேதி சென்னை: வருகை: முதல்வர், துணை முதல்வரிடம் 50 தொகுதி கேட்க முடிவு

சென்னை: உள்துறை அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அமித்ஷா வரும் 21ம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமிழக சட்டப் பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜவுக்கு 50 தொகுதிகளை கேட்டு பெறவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன. ஏற்கனவே உள்ள கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் முதல்கட்டமாக சுமூக பேச்சுவார்த்தை நடத்த அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அமித்ஷா வரும் 21ம் தேதி சென்னை வரவுள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர் தேர்தல் கூட்டணி குறித்து பேசவுள்ளார்.

அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையின்போது தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட உள்ள நிலையில் அவர் சென்னை வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்கும் அமித்ஷா தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல் எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அதில், 50 தொகுதிகளை கேட்டுப் பெறவும் திட்டமிட்டுள்ளார். மக்களவை தேர்தலின்போது தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்தார். அப்போது அதிக தொகுதிகளை விட்டுக் கொடுக்க அதிமுக தலைமை மறுத்து விட்டது. இதனால் பியூஷ் கோயல் கோபித்துக் கொண்டார். ஆனாலும் அவரால் அதிக சீட்டுகளை பெற முடியவில்லை.

இதனால் இந்த முறை அமித்ஷாவை பொறுப்பாளராக நியமித்தால், அவர் கேட்கும் தொகுதிகளை அதிமுக கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதனால்தான் அவரை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. 50 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி கூட குறைக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா வருகையும், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அழைத்து பேச இருப்பதும் கூட்டணி கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகிகள் இப்போதே தேர்தலில் சீட்டு கேட்டு கட்சித் தலைமையை நெருக்கிவரும் நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை அரசியல் வட்டாரங்களில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மத்திய அரசு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: