பீகார் முதல்வராக தொடர்ந்து 4வது முறை நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு: பாஜவுக்கு 2 துணை முதல்வர் பதவி?

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் இன்று மாலை பதவியேற்கிறார். அவருடன் பாஜ.வை சேர்ந்த 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜ 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கூட்டணி கட்சிகளும் சில இடங்களை பிடித்தன. இந்நிலையில், பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், நிதிஷ் குமார், பாஜ.வின் மேலிட பார்வையாளராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இக்கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், தொடர்ந்து 4வது முறையாக இம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பை அவர் பெற்றார். இதைத் தொடர்ந்து, ராஜ்பவன் சென்று ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ் குமார் சந்தித்தார்.

அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 4 கட்சிகளின் எம்எல்ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிப்பதற்கான கடிதங்களை சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்கும்படி அழைத்தார். ராஜ்பவனில் இருந்து வீடு திரும்பிய பிறகு தனது வீட்டுக்கு வெளியே நிதிஷ் அளித்த பேட்டியில், “திங்களன்று (இன்று) மாலை 4 - 4.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெறும். பிறகு, சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது பற்றி முடிவு எடுக்கப்படும்,” என்றார். பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமாருடன் பாஜ.வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வராக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே  நேரம், எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன, யாரெல்லாம் பதவியேற்பார்கள் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுசில் குமார் மோடியை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இருந்தனர். இதில், 18 பேர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். 12 பேர் பாஜ.வை சேர்ந்தவர்கள். தற்போது, பாஜ 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அதற்கு அதிக அமைச்சர்கள் பதவி கிடைக்க உள்ளது. கடந்த முறை 71 ஆக இருந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்கள் பலம், இம்முறை 43 ஆக குறைந்துள்ளது. இதனால், இக்கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கருதப்படுகிறது. இத்தேர்தலில் கடந்த முறை அமைச்சர்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளம், பாஜ.வை சேர்ந்த 24 பேர் போட்டியிட்டனர். இதில், 10 பேர் தோல்வி அடைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது.

கூட்டணி கட்சிகளுக்கும் பதவி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இம்முறை இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விஐபி கட்சி ஆகியவை தலா நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களை கைப்பற்றுவதற்கு, இவை முக்கிய காரணியாக இருந்துள்ளன. எனவே, இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவின் தலைவர் ஜிதன் ராம் மன்ஜி ஏற்கனவே இம்மாநில முதல்வராக இருந்தவர் என்பதால், ‘அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன்’ என முன்பே அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரை ராஜ்நாத் சிங் தனியாக சந்தித்த மர்மம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, அவருடன் பாஜ.வின் மேலிட பார்வையாளராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுசில் குமார் மோடி உள்ளிட்டோர் செல்லவில்லை. ஆளுநரை சந்தித்து விட்டு நிதிஷ் சென்றபோது, ராஜ்நாத் சிங்கும், சுசில் குமார் மோடியும் தனியாக சென்று ஆளுநரை சந்தித்து பேசினர். இது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

சுயேச்சையிடம் தோற்ற ஐக்கிய ஜனதா தளம்

பீகார் சட்ட மேலவையில் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடங்களுக்கான தேர்தல், கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை முடிந்தது. வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அதிகாரப்பூவர்மாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஐக்கிய ஜனதா தள கட்சி 2 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆனால், ஏற்கனவே பெற்றிருந்த தர்பங்கா ஆசிரியர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் திலீப் குமார், சுயேச்சை வேட்பாளரான சர்வேஷ் குமாரிடம் தோல்வியடைந்தார். மீதமுள்ள 5 இடங்களை பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

2 துணை முதல்வர்கள் யார்?

பீகார் தேர்தலில் இம்முறை பாஜ அதிக இடங்களை பிடித்துள்ளதால், 2 துணை முதல்வர்கள் பதவிகள், முக்கிய இலாகாக்களை அக்கட்சி பெறும் என்று கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் பாஜ மூத்த தலைவர் சுசில் குமார் மோடி துணை முதல்வராக இருந்தார். இம்முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றும், தேசிய அரசியலில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்றும் பரவலாக பேச்சு அடிப்படுகிறது. அதன் காரணமாகவே, நேற்று அவர் பாஜ.வின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படவில்லை.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக கதிஹர் தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றுள்ள தர்கிஷோர் பிரசாத்தும், துணைத் தலைவராக பெட்டியா தொகுதி எம்எல்ஏ ரேணு தேவியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம், இவர்கள் இருவருமே துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: