தீபாவளி நாளில் நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் நமது வீரர்களுக்காக விளக்கேற்றுவோம்..!! பிரதமர் மோடி

டெல்லி: நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் நமது வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாளை  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும், நமது ராணுவ வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

2014ல் சியாச்சின், 2015ல் பஞ்சாபில், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பணியிலிருந்த வீரர்களுடனும், 2017ல் காஷ்மீரின் வடக்குப் பகுதி, 2018ல் உத்தராகண்ட், மற்றும் 2019ல் காஷ்மீரின் ரஜோரி பகுதியிலும் தீபாவளியை கொண்டாடினார். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் அவருடன் செல்ல உள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வரும் ஜெய்சல்மரில் உள்ள விமானப்படை தளத்திற்கு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் எல்லைப்பகுதிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நமது நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் ராணுவ வீரர்களுக்காக, தீபாவளி பண்டிகையன்று விளக்கேற்றுவோம். நமது வீரர்களின் தைரியத்திற்கு, நன்றியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளால் மட்டும் முடியாது. எல்லையை பாதுகாக்கும் வீரர்களின் குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: