டெல்லி மயூர் விகார் பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, முதல்வரிடம் டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணையிட்டார். இதை தொடர்ந்து, கடந்த 26.10.2018 அன்று கட்டிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மயூர் விகார் பள்ளி கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய பள்ளிக் கட்டிடம் 6515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், க.பாண்டியராஜன், புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் வச்சானி, பள்ளிக் கல்வி ஆணையர் என்.வெங்கடேஷ், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: