திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் சோபா தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் சோபா தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின. சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சையது ஜாபர் (48). குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் சோபா மற்றும் பர்னிச்சர்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு, 20க்கும் ஊழியர்கள் பணி புரிகின்றனர். கீழ்தளத்தில் வாகனங்களுக்கு பொறுத்தப்படும் பேரிங் தயாரிக்கும் கம்பெனியும், மேல் தளத்தில் சோபா தயாரிக்கும் கம்பெனியும் செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் ஊழியர்கள் அனைவரும் சாப்பிட சென்றனர். அப்போது, திடீரென சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதை பார்த்ததும், ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். முடியவில்லை. தீ மளமளவன பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து பூந்தமல்லி, தாம்பரம், சானடோரியம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும்  கரும்புகை சூழ்ந்து, புகை மண்டலமாக காட்சியளித்தது. புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த தீ விபத்தில், சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Related Stories: