அதிகார பலம், பண பலம் மூலம் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, : பீகாரில் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி பாஜக கூட்டணி, ஆட்சியை பிடித்துள்ளது என்று ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதுக்கோட்டையில் அளித்த பேட்டி: 29 சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி கடந்த 73 ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளர்களுக்கான உரிமையை பறித்துள்ளது மோடி அரசு. இச்சட்ட திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 26ம் தேதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்த இருக்கின்ற பொது வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.

பீகாரில் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. உள்கூத்து வேலை செய்து ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக பலவீனமடைய செய்துள்ளது. லோக் ஜனசக்தி கட்சியினர் தங்களது வேட்பாளரை ஆதரித்தும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த செய்துள்ளதிலும் உள்ளடி வேலை செய்துள்ளது பாஜக. இந்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதாதளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதும், இடதுசாரி கட்சிகள் 16 இடங்களை வென்றிருப்பதும் முக்கியமான அம்சம்.பாஜக நடத்தும் வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. நீதிமன்றமும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. எடப்பாடி அரசோ அனுமதி மறுப்பு என்று கூறிக்கொண்டே அனுமதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: