சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.: குற்றவாளிகளைத் தேடி மும்பை விரைந்தது தனிப்படை போலீஸ்

சென்னை: சென்னை யானைகவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம்  குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொலையாளிகள் மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலால் தனிப்படை போலீஸ் மராட்டியம் விரைந்துள்ளது. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட தலில் சந்த் சென்னை யானைகவுனியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால் அவரது மகள் பிங்கி வீட்டிற்கு சென்று பார்த்தபோது தலில் சந்த் அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் கொலைசெய்யப்பட்ட சடலமாக இருந்தனர்.

குறிப்பாக தலில் சந்த் முகத்திலும், தாய் புஷ்பா பாய் நெற்றியிலும், சகோதரர் ஷீத்தல் உச்சம் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு மகள் பிங்கி அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் அறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஷீத்தலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மனைவி ஜெயமாலாவுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதில் பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெயமாலாவின் சகோதரர்கள் இருவர் மற்றும் சகோதரி அவரது பெண் குழந்தைகள் எதிர்க்காலத்திற்காக ஜீவனாம்சமாக குறிப்பிட்ட அளவு பணமும், சொத்தும் கேட்டு வந்ததாக தெரிகிறது.

இதற்காக கடந்த ஓராண்டில் புனேவில் இருந்து 10-க்கும் மேற்பட்ட முறை வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி தலில் சந்த் தாமதம்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஜெயமாலா சகோதரர்கள் சென்னை வந்த போது தலில் சந்த் மற்றும் ஷீத்தல் உடன் கடும் தகராறில் ஈடுபட்டதுடன், எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் அவர்கள் தான் இந்த கொலையில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். அவர்கள் நேரடியாக கொலையில் ஈடுப்பட்டார்களா? அல்லது கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தனிப்படை போலீசார் மராட்டியம் விரைந்துள்ளனர்.

Related Stories: