நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழகத்திற்கு விருது: வெங்கையா நாயுடு வழங்கினார்

சென்னை:ஜல்சக்தி துறை சார்பாக நாடு முழுவதும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் எது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து 2வது ஆண்டாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான விருதுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் நாட்டிலேயே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் அதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லி விக்யான் பவனில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நாடு முழுவதும் தற்போது மாறி வரும் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பிரச்னை ஆகிய விவகாரத்தில் நீர் மேலாண்மை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதில் சிறந்து விளங்கிய மாநிலமாக நாட்டிலேயே தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எனது வாழ்த்துக்களை முதலாவதாக என தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேப்போன்று 2வதாக மகாராஷ்டிரா, மூன்றாவது ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் அதற்கான விருதுகளை வழங்கினார். இதில் தமிழகத்திற்கான விருதை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்ட தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசகம் பெற்றுக்கொண்டார். இதில் துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: