வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மையங்களில் போலி பில் போட்டு பல கோடிகளில் வரி ஏய்ப்பு: அதிகாரிகள் சரிகட்டப்படுவதாக குற்றச்சாட்டு

வேலூர்: வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் சில மையங்களில் போலி பில் போட்டு பல கோடிகளில் வரி ஏய்ப்பு  செய்யப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிகட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பர்னிச்சர்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின்  எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதில் குறிப்பிட்ட வீட்டுஉபயோகப்பொருட்கள் மற்றும் பர்னிச்சர்ஸ்களை விற்பனை  செய்யும் கடைகளில் ஓரிஜினல் பிராண்டுகளை போலவே போலியான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்து  விற்பனை செய்து கோடிகளில் லாபம் சம்பாதித்து வருவதாக புகார்கள் உள்ளது. இப்படி சம்பாதித்த பணத்தில் அந்த  நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் தங்கள் கிளைகளை தொடங்கியுள்ளது. நடிகைகளுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து, தரமற்ற பொருட்களை விற்பனை  செய்துவிடுகின்றனர். இப்படி பொதுமக்களுக்கு போலி பொருட்கள் விற்பனை செய்து கோடிகளில் புரளும் அந்த நிறுவனங்கள்  அரசுக்கு செலுத்த வேண்டிய வரியும் முறையாக செலுத்துவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதுபோன்ற நிறுவனங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பில், வருமான வரி  கணக்கு காட்ட ஒரு பில் என்று ஒவ்வொன்றிற்கும் போலி பில் தயாரித்து வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இப்படி வரி ஏய்ப்பு செய்வதால் ஆண்டுக்கு பல கோடிகளை முறைகேடாக சேர்க்கின்றனர்.

அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிறுவனங்கள் ெதாடங்கியுள்ள கிளைகள் அரசு உயர் அதிகாரிகளால்  சரிகட்டப்பட்டு, எந்தவிதமான தடையுமின்றி ெதாடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள்  எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த வேண்டிய அதிகாரிகளும் சரிகட்டப்படுவதால் எந்தவிதமான தடையுமின்றி  சட்டவிரோதமாக போலி பொருட்கள், போலி பில், போலி கணக்கு காட்டி கோடிகளில் சம்பாதித்து விடுகிறார்களாம். இதற்கு கடிவாளம் போட வேண்டிய உயர் அதிகாரிகள் இனியாவது விழித்துக்கொண்டு, இதுபோன்ற நிறுவனங்களில் அதிரடி  சோதனை நடத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை வட்டியுடன் வசூலிப்பதோடு, முறைகேடுகளுக்கு  துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலி ஜிஎஸ்டி எண் கண்டறிவது எப்படி?

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின்னரும் முறைகேடுகளில் ஈடுபட்டு ருசிபார்த்த நிறுவனங்கள் உரிய விவரங்களை  அளிக்காமல் போலியான விவரங்களையே அளித்துள்ளதாக  புகார்கள் எழுந்துள்ளது. ஒரு நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண்  சரியானது தானா என்பதை கண்டறிய www.gst.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 15 இலக்க  எண்ணாக இருக்கும். முதல் 2 எண்கள் மாநிலம் அடுத்த 10 இலக்க எண் பான் எண், 13 வது இலக்க எண் மாநிலத்தில் பதிவு  செய்யப்பட்டதன் நிலை, 14வது எண் டிபால்ட் எண், கடைசி எண் குறியீட்டை சரிபார்ப்பதற்காக அளிக்கப்படுவதாகும். அது எண்  அல்லது எழுத்தாக இருந்தாலும் வரித்துறையின் பயன்பாட்டிற்காக அந்த எண் வழங்கப்படுகிறது. தவறான எண்  குறிப்பிடப்பட்டிருந்தால் helpdesk@gst.gov.in என்ற முகவரிக்கு புகார் அளிக்கலாம். தமிழ்நாடு ஜிஎஸ்டி குறியீடு எண் 33.

Related Stories: