திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா, தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்!: ஐகோர்ட்டில் கோயில் நிர்வாகம் தகவல்..!!

சென்னை: கார்த்திகை திருநாளையொட்டி திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடத்துவது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தீபம், தேர் திருவிழா நடத்தக் கோரி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சக்திவேல் தொடர்ந்த வழக்கில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், இன்று அதற்குரிய கூட்டம் நடைபெற்று வருவதாகவும், அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் நாளை திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடத்துவது குறித்து  முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் இந்த வருடம் மக்கள் அதிகளவில் பங்கேற்றால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சூழலில் தீபத் திருவிழா நடத்துவது தொடர்பாக விவாதிக்க இன்று கூட்டம் நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

மேலும் திருவண்ணாமலை தேர் திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயிலுக்குள்ளேயே தீபத் திருவிழா நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து,  கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நவம்பர் 18க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதியன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: