'அரசின் இலவச நீட் பயிற்சியில் சேர, கடந்த ஆண்டு படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்': பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் சேர, கடந்த ஆண்டில் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பயிற்சி வகுப்பு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்பானது கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் 12ம் வகுப்பில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி வழங்கப்படும். இந்நிலையில், நடப்பாண்டில் இருந்து இந்த பயிற்சி வகுப்பில், கடந்த ஆண்டுகளில் அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் படித்து தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

அதன்படி மாநிலம் முழுவதும் இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் கடந்த ஆண்டு படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலை தயாரிக்கவும், விருப்பமுள்ள மாணவர்களை கணக்கெடுக்கவும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையானது இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வை எழுதுவதற்கு அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களிலேயே சேர்ந்து தனது பயிற்சியை தொடர அறிய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

Related Stories: