துரைக்கண்ணுவிடம் ரூ.800 கோடி கொடுத்த விவகாரம் பாதியை அமுக்கிய நிர்வாகிகளிடம் போலீஸ் மூலம் விசாரிக்க திட்டம்: ஆளுங்கட்சி நெருக்கடியால் பினாமிகள் தலைமறைவு

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவிடம் ரூ.800 கோடி கொடுத்த விவகாரத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு வருகிறது. தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவிடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கு செலவழிக்க தலா ரூ.200 கோடி வீதம் ரூ.800 கோடியை ஆளும்கட்சியினர் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அக்டோபர் 31ம் தேதி அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதனால், அந்த பணத்தை கேட்டு துரைக்கண்ணுவின் மனைவி மற்றும் இளைய மகன் ஐயப்பனிடம் ஆளும்கட்சியினர் விசாரணை நடத்தினர். இதில் எந்த தகவலும் கிடைக்காததால் தான், அமைச்சர் துரைக்கண்ணுவின் பினாமிகளாக கருதப்படும் தஞ்சை மாவட்டம் கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள வெளியாகி கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் மற்றும் அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: இதுவரை ஊராட்சி தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் உள்ளிட்டோரிடம் பணமாக ரூ.247 கோடி, சொத்தாக ரூ.9 கோடி மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் துரைக்கண்ணு ரூ.5,000 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாக கூறப்படுகிறது. குடந்தை அதிமுக பிரமுகர் கடந்த மாதம் 9ம் தேதி அமைச்சரின் சொத்து குவிப்பு குறித்த விவரத்தை தகவல் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். அந்த கடிதம் 16ம் தேதி அங்கு சென்றடைந்தது. இதுகுறித்து விசாரிக்க தமிழக வருவாய் புலனாய்வு அமைப்புக்கு ஆவணங்களை இணைத்து அனுப்பியுள்ளோம்.

விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஆர்டிஐ பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் அமைச்சரின் சொத்து குறித்து வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தும் என தெரிகிறது. அதேநேரம் இந்த விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதால், அமைச்சரின் சொத்து விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் பீதியில் உள்ளனர். இதில் பலர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சையை சேர்ந்த மூத்த எம்பி ஒருவர், நிர்வாகிகளிடம் துரைக்கண்ணு கொடுத்து வைத்த பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இதுவரை ரூ.247 கோடியை ரொக்கமாக மீட்டுள்ளார். பணத்தை திருப்பி ஒப்படைத்தவர்கள் பாதியை அமுக்கி விட்டு, பாதியை தான் கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. வரும் 16ம் தேதி அமைச்சர் துரைக்கண்ணுவின் படத்திறப்பு நிகழ்ச்சி பாபநாசத்தில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பணத்தை பதுக்கியவர்களிடம் கட்சி தலைமை, போலீஸ் மூலம் அதிரடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், படத்திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

* தந்தையின் பிஏவை தாக்கிய மகன்

துரைக்கண்ணு இறுதிச்சடங்கில், அவரது துறை ரீதியான பிஏ தாமரை பங்கேற்றார். அவரை துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன், அருகில் உள்ள செங்கல் சூளைக்கு அழைத்து சென்று உன்னால் தாண்டா இவ்வளவும் நடந்துள்ளது எனக்கூறி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்துள்ளார். இங்கெல்லாம் சிகிச்சை பெறக்கூடாது, வெளியூருக்கு ஓடி போயிடு என்று ஐயப்பனும், அவரது ஆதரவாளர்களும் மிரட்டியுள்ளனர். இதனால் இறுதிச்சடங்கில் இருந்து பாதியிலேயே சென்னை வந்த தாமரை, தனது அறையில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: