சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி காவல்நிலைய மரணங்கள் தமிழகத்தில்தான் அதிகம்: மனித தன்மையற்ற செயல் என கண்டனம்; சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை; டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலையில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, காவல்நிலைய மரணங்கள் தமிழகத்தில்தான் அதிகம் நடக்கிறது, இது மனித தன்மையற்ற செயல். இதை தடுக்க அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் நேற்று விசாரித்தார். இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘‘வழக்கின் முக்கிய குற்றவாளியாக இவர் உள்ளார். நடந்த சம்பவத்தில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஜாமீன் கொடுத்தால் வழக்கின் விசாரணை பாதிக்கும்’’ என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நீதிபதியின் உத்தரவில், ‘‘இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காவல் நிலையத்தில் விசாரணையின்போது உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காவல்நிலைய மரணம் என்பது மனிதத்தன்மையற்ற செயல். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல் துறையினர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.புகார்தாரர்களை மோசமாக நடத்துவது, உரிய காரணமின்றி, நீண்டநேரம் காத்திருக்க வைத்தல் கூடாது. புகார் அளிக்க வரும் பொதுமக்களின் உரிமைகள் குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முன் பகுதியில் தகவல் பலகை வைக்க வேண்டும். இந்த பலகை ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும், முக்கியமான பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும். இதில் விதிமீறல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு குறித்து தமிழக டிஜிபி ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

* மதுரை நீதிமன்றத்தில் மட்டுமே விசாரணை

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் தூத்துக்குடி நீதிமன்றத்திலும், மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. எந்த நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பது என்பது குறித்து விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், வீ.பாரதிதாசன் ஆகியோர், ‘‘சிபிஐ விசாரணை வரம்புக்கு உட்பட்ட மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்தான் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உரிய விசாரணை நீதிமன்றமான மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்தான் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: