வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக மோகன்லால் ஜூவல்லரி உட்பட 32 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியன

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன்லால் கபாரி. இவர் சென்னை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி.போஸ் சாலையில் மோகன்லால் ஜூவல்லரி என்ற பெயரில் மொத்த தங்க நகை கடை மற்றும் நகை பட்டறை நடத்தி வருகிறார். சென்னையை தலைமையிடமாக கொண்டு மொத்த விற்பனை கடை இயங்கி வருகிறது. இதனால் மும்பை மற்றும் தமிழகம் முழுவதிலும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் நகைகளை ஆர்டர் செய்து வாங்கி செல்வது வழக்கம்.

அந்த வகையில் மோகன்லால் ஜூவல்லரியில் மொத்த நகைகள் விற்பனையில் வருமான வரித்துறைக்கு கணக்கு குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேநேரம் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் தங்க நகைகளை முறையான ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள மோகன்லால் ஜூவல்லரி கடை மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கடையின் உரிமையாளர் மோகன்லால் கபாரி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் மும்பையில் உள்ள அலுவலகம் மற்றும் நகைக்கடைகள் என 32 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மோகன்லால் ஜூவல்லரியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்குகளை சரிபார்த்து வருகின்றனர். இந்த அதிரடி சோதனையில் இரண்டு விதமாக கணக்குகளை கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கோடி மதிப்புள்ள நகைகள் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் போலி ரசீதுகள், கணக்கில் வராத தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: