சொந்த ஊர் செல்வதற்காக ஆம்னி பஸ்சில் 73 ஆயிரம் பேர் முன்பதிவு: குறைவான பஸ்களை இயக்க முடிவு

சென்னை: தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது வெளியூர்களில் படிப்பு, வேலை நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பெரும்பாலான மக்கள் ரயில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். எனினும் கட்டணம் அதிகம் இருந்தாலும் பலர் சொகுசு மற்றும் விரைவான பயணத்துக்கு ஆம்னி பஸ்களையே தேர்வு செய்கின்றனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக குறைவான முன்பதிவே ஆம்னி பஸ்களில் நடந்துள்ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது:

தீபாவளி பண்டிகைக்கு இயக்க 2,000 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அதாவது 11ம் தேதி (இன்று)-16,433, 12ம் தேதி-18,285, 13ம் தேதி 21,588, 14ம் தேதி 17,146 பேர் என நான்கு நாட்களுக்கு மொத்தமாக 73,452 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக 11ம் தேதி 514 பஸ்களும், 12ம் தேதி 571 பஸ்களும், 13ம் தேதி 675 பஸ்களும், 14ம் தேதி 536 பஸ்களும் என மிகவும் குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நாள்தோறும் 60 ஆயிரம் பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணித்திருந்தனர். நடப்பு ஆண்டில் தொற்று பரவல் அச்சம் காரணமாகவும், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் செயல்படாததின் காரணமாகவும் குறைவான பயணிகளே பயணிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: