தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் தொடங்கியது எஸ்இடிசி பஸ்சில் 65,000 பேர் முன்பதிவு: கோயம்பேட்டில் பிரத்யேக ஏற்பாடு

சென்னை: தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு தேதிகளில் பயணிப்பதற்காக நேற்று வரை 65,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் 13ம் தேதி வரையில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மூன்று நாட்களுக்கு 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக நேற்று வரை எஸ்இடிசி பஸ்களில் பயணிப்பதற்காக 65 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் திட்டமிட்டபடி தங்களது பயணத்தை துவங்கி விட்டனர். இதையொட்டி போக்குவரத்துத்துறை சார்பில் பல்வேறு பிரத்தியேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு பேருந்துகளுக்காக 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் அதிக அளவு பயணிகள் வருவதால் அங்கு வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஊருக்கு எங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்தும் வகையில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நாளை, நாளைமறுநாள் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* முன்பதிவு செய்யாதவர்கள் கவனத்துக்கு..

முன்பதிவு செய்யாமல் நேரடியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வருவோருக்காக, அங்கு தற்காலிக நடைமேடை 7,8,9 அமைக்கப்பட்டுள்ளது. 7வது நடைமேடையில் இருந்து சேலம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், 8வது நடைமேடையில் இருந்து வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களுக்கும், நடைமேடை 9ல் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், பரமக்குடி, அறந்தாக்கி, சிவகங்கை ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நடைமேடைகளுக்கு சென்று, அங்கிருந்து மக்கள் நேரடியாக பயணிக்கலாம்.

Related Stories: