ஓமலூர் அருகே பரபரப்பு சம்பவம்: இரும்பு தொழிற்சாலையில் 1 கோடி காப்பர் கொள்ளை :காவலாளிகளை அறையில் அடைத்து துணிகரம்

* லாரியில் வந்த 20 பேர் கும்பல் அள்ளிச்சென்றது

ஓமலூர்: ஓமலூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் 1 கோடி மதிப்பிலான காப்பர் கம்பிகளை 20 பேர் கொண்ட கும்பல் லாரியில் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை சுமார் 70 ஏக்கரில் செயல்பட்டு வந்தது. இங்கு பயன்பாடில்லாத இரும்பு பொருட்களில் இருந்து இரும்புகளை உருக்கி இதர பயன்பாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. லாபகரமாக இயங்கி வந்த இந்நிறுவன உரிமையாளர் வேங்கடபதி இறந்த பின்பு தொடர்ந்து, நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 7 ஆண்டுகளாக மூடி உள்ளது. கடனுக்காக நிறுவனத்தை பறிமுதல் செய்து வங்கியின் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு செடி, கொடி மரங்கள் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு வடமாநில காவலர்கள் உட்பட 11 பேர் பணியில் இருந்தனர். நள்ளிரவில் முகமூடி அணிந்து வீச்சரிவாள் மற்றும் கத்தியுடன் லாரியில் 20 பேர் கொண்ட மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், காவலாளிகளை மிரட்டி ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்னர், நிறுவனத்தில் இருந்த சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான காப்பர் கம்பிகளை சுமார் 5 மணிநேரம் பொறுமையாக லாரியில் ஏற்றி கொள்ளையடித்துச் சென்றனர்.  

அப்பகுதியில் தொடர்ந்து நாய்கள் குரைத்துக் கொண்டிருந்ததால் அவ்வழியாக சென்ற நபர்கள் சந்தேகமடைந்து கருப்பூர் மற்றும் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவலாளிகளை மீட்டு கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இரு போலீஸ் எல்லையிலும் இது வராததால் நேற்று காலை சூரமங்கலம் போலீசார் வந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

Related Stories: