தமிழக சட்டப்பேரவை தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா கூறினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது. 15வது சட்டப்பேரவையின் ஆயுள்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 21ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு மே 15ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 2011ல் ஏப்ரல் 13ம் தேதியே வாக்குப்பதிவு நடந்தது. இந்த முறை  தமிழகத்துடன் சேர்த்து, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம், கேரளா  ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட வேண்டும்.  இந்தநிலையில், கொரோனா பரவல் இருந்தாலும் திட்டமிட்டப்படி தமிழகம் உள்ளிட்ட 5 மாநில  சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா அளித்த பேட்டி: கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக எந்த தேர்தலையும்  தள்ளிவைப்பது  என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த கொரோனா நேரத்திலும்,  பீகாரில் வெற்றிகரமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு வாக்காளருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. இந்த தேர்தலில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் 3ம் கட்டத்தேர்தலில் பதிவாகி உள்ளது. தேர்தலையொட்டி மொத்தம் ₹66 கோடி மதிப்புள்ள பொருட்கள், ரொக்க பணத்தை ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

 

பீகார் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதால், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிப்பது தாமதமானால் கூட, வருங்காலத்தில் எல்லா தேர்தல்களையும் திட்டமிட்டபடி நடத்த முடியும் என்ற நம்பிக்கை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்தாலும், பீகாரில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: